எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிக்கை மூலம் அறிவித்தது.
“இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது. ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்வோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து அதன் போட்டியாளரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஷடார்லிங்க் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களை ஸ்பேஸ்எக்ஸ் பெறுவதற்கு உட்பட்டது இந்த ஒப்பந்தம்.
ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், ஜியோவின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்க் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், ஸ்டார்லிங்க் சேவைகளை நேரடியாக நுகர்வோர் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசேர்க்க முடியும் என்பதையும் ஆராய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தந்து அதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நம்பகமான இணையம் முழுமையாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தம் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல், ஜியோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.