புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் போது வாழ்க்கைச் செலவைக் குறைத்து மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும காத்திருப்போர் பட்டியலில் உள்ள 800,000 குடும்பங்களுக்கு சதோச விற்பனை நிலையங்கள் மூலம் சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 5,000 ரூபா பெறுமதியுடைய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை 50 வீத சலுகையில் 2,500 ரூபாவுக்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
லங்கா சதோச ஊடாக தகுதியுள்ள பயனாளிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்தப் பொதி வழங்கப்படும்.
இந்த விசேட சலுகையானது தற்போது அஸ்வேசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள 812,753 குடும்பங்களுக்குக் கிடைக்கிறது.
ஏப்ரல் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தத் திட்டம் ஏப்ரல் 13 ஆம் திகதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். மேலும், இது தகுதியான வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முறையான வழிமுறை பின்பற்றப்படும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் கொண்டாடப்படும் முதலாவது சித்திரைப் புத்தாண்டு என்பதோடு, இந்த திட்டத்தின் ஊடாக மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.