Tuesday, May 13, 2025
HomeMain NewsSri Lankaஅரசியல் தலைவர்களின் ரமழான் வாழ்த்துச் செய்தி

அரசியல் தலைவர்களின் ரமழான் வாழ்த்துச் செய்தி

பொதுமக்களின் நிதி மற்றும் அரச சொத்துக்களை அழிக்கும் அநாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக, எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக் கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தையும் பிரஜைகள் சமூகத்தையும் நாட்டில் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமழான் மாத நோன்பு , உலக ஆசைகளிலிருந்து தூரமாகி, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. உலகெங்கிலும் பசியால் வாடும் மக்களுக்கு தானதருமம் செய்யவும், உள்ளத்தை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளவும், இந்த மாதம் ஒரு சிறந்த வாய்ப்பாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுடன் கூடிய முன்னேற்றகரமான இலங்கை தொடர்பில் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நனவாக்கி,சுதந்திரம், சமத்துவம், ஒற்றுமை மற்றும் கண்ணியம் நிலவும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப நாம் எடுக்கும் முன்னெடுப்பில் இஸ்லாத்தின் இந்த போதனைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல், பொதுமக்களின் நிதி மற்றும் அரச சொத்துக்களை அழிக்கும் அநாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக, எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக் கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தையும் பிரஜைகள் சமூகத்தையும் நாட்டில் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும்.

மத எல்லைகளைக் கடந்து, மனிதநேயத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் சுயநலத்திற்குப் பதிலாக பரோபகாரத்தை ஊக்குவிக்கும் பண்டிகையான ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுகின்ற இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி யுகத்திற்கான எதிர்பார்ப்புகள் நிறைவேறும் சமாதானம், நல்லிணக்கம் நிறைந்த இனிய ஈதுல் பித்ர் பெருநாளுக்கு வாழ்த்துவதாக ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரு மாத காலமாக நோன்பு நோற்று ஈதுல்-ஃபித்ர் பெருநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் மத, சமூக, கலாசார செய்தியை வழங்கும் ரமழான் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதை தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாக எதிர்க்கட்சி தலைவர் தமது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையில் பன்னிரண்டு மாதங்களில் ஒன்பதாவது மாதமாக கருதப்படும் ரமழான் மாதம், நன்மை தரும் மாதமாக அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 14 மணி நேரம் இறைவனுக்காக நோன்பு நோற்று, அனைத்து துன்பங்களையும் தாங்கி, தன்னைக் கட்டுப்படுத்தி, சமூகத்திற்கு நலன் பயக்கும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை உருவாக்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்குகிறது. மேலும், இது தாராள மனப்பான்மை மற்றும் சமத்துவத்தின் மகத்தான செய்தியை உலகிற்கு கொண்டு வரும் மிக முக்கியமான பெருநாள் பண்டிகையாகவும் குறிப்பிடலாம்.

ஒரு நாடாக, நாம் மீண்டும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலையிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்து மீள்வதற்கான வழிகாட்டுதலை ரமழான் பண்டிகையிலிருந்து முன்மாதிரியாகக் கொள்ளலாம். தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் மற்றவர்களைப் பற்றியும் சிந்தித்து செயல்படுவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய சுபீட்சத்தை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டு மீண்டும் சுபீட்சத்தை நோக்கி பயணிக்க உதவியாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவர் தமது வாழ்த்திச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு, முழு முஸ்லிம்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. இவர்களின் கொடூரங்கள் இல்லாதொழிய அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்!

ஈமானின் பலத்திலும் பக்குவத்திலும் இந்நேரத்தில் நாம் அணிதிரள்வதே முஸ்லிம் சமூகத்துக்கு பாதுகாப்பாக அமையும். முஸ்லிம்களின் ஈமானை எந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அழிக்க முடியாது. இதற்கு காஸா மக்கள் சிறந்த அத்தாட்சி. இருப்பைப் பலப்படுத்த இஸ்ரேல் மேற்கொள்ளும் ஈனச்செயல்களும் இழி செயல்களும் இறுதியில் மண்கவ்வவே செய்யும். “இறுதி வெற்றி எமக்கே!” என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் உள்ளோம்.

அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து நோன்பு நோற்று, நல்லமல்கள் செய்த நாம், ஈமானின் பக்குவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். நெருக்கடிகள், சோதனைகளின்போது பொறுமை மற்றும் தொழுகையுடன் உதவி தேடுவதே சிறந்தது. ரமழானின் பக்குவங்கள் நமது முன்னேற்றப் பாதைகளுக்கு உறுதியாக அமையட்டும்.

எமது நாட்டு அரசியல் போக்குகளும் ஆரோக்கியமாகத் தென்படவில்லை. அரச உயர்மட்டத்தில், திரைமறைவில் அரங்கேற்றப்படும் முஸ்லிம் விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். சமூகங்களை நேசிக்கின்ற மற்றும் மத நம்பிக்கைகளை கௌரவப்படுத்துகின்ற நிலைப்பாட்டுக்கு இந்த அரசாங்கம் வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறை தூதவர் நபிகள் நாயகம் போதித்த சமத்துவம், சுய கட்டுப்பாடு, நல்லொழுக்கம், அன்பு, பரிமாற்றம், ஒற்றுமை, சமாதானம் ஆகியவற்றை நாம் அனைவரும் கடைபிடித்து நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

“ரமலான் என்பது மனிதர்களை அனைத்து வகையிலும் பக்குவப்படுத்தும் ஓர் இனிய திருநாளாகும். ரமலான் கற்றுத் தரும் இந்தப் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைப்பிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி.

உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

எமது நாட்டில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வாழும் இஸ்லாமிய சொந்தங்களின் தேவைப்பாடுகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அவர்களுக்குரிய மத சுதந்திரம் பாதுகாக்கப்படும். கடந்தகாலங்களில்போல் அல்லாமல் சகோதரத்துவத்துடன் பண்டிகையை கொண்டாடும் காலம் உதயமாகியுள்ளது.” என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments