தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை, சட்டத்துக்கு முரணானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோன் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டமை செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு இன்னும் அமுலில் உள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவு அமுலில் இருக்கையில், தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு பிரேரணை ஒன்றை கையளித்திருக்கின்றனர்.
2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தற்போது பதவியில் இருக்கும் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக மாத்திரமே அவ்வாறானதொரு பிரேரணையை சமர்ப்பிக்க முடியும்.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளமையானது முற்றாக அரசியலமைப்புக்கும் 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க உயர் அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் முரணானது அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சட்ட ரீதியான அதிகாரம் இல்லாத ஒன்றையே இவர்கள் மேற்கொள்ளப்போகிறார்கள் என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.