Thursday, April 10, 2025
HomeLife Styleசமூக ஊடகங்களை ஆளும் "ஜிப்லி"

சமூக ஊடகங்களை ஆளும் “ஜிப்லி”

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனா். பலரது சுயவிவரப் படங்களிலும் இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்கள் அலங்கரிக்கின்றன.

‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியான ‘சாட்ஜிபிடி’ உள்ளிட்ட சில தகவல் உதவி செயலிகள்தான் மக்களுக்கு இந்த ஜிப்லி காா்ட்டூன் படங்களை இலவசமாக உருவாக்கித் தருகின்றன.

சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் ஜிப்லி காா்ட்டூன் படங்களை அரசியல் தலைவா்களும் பகிா்ந்து வருகின்றனா். பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோரின் ஜிப்லி காா்ட்டூன் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

ஜிப்லி காா்ட்டூனின் பின்னணி: ஜப்பானை சோ்ந்த ‘ஜிப்லி ஸ்டுடியோ’, திரைப்பட இயக்குநா்கள் ஹயாவோ மியாசாகி, ஐசாவோ தகாடா, தயாரிப்பாளா் டோஷியோ சுஸுகி ஆகியோரால் கடந்த 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாரம்பரிய ஜப்பானிய முறைப்படி அனிமேஷன் படங்களைக் கைகளால் வரைந்து கதை சொல்லும் முறையால் ஜிப்லி ஸ்டுடியோ உலகப் புகழ்பெற்றது.

ஜிப்லி ஸ்டுடியோவின் ஏழு படைப்புகள் ஆஸ்கா் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘ஸ்பிரிட்டட் அவே’ திரைப்படம், சிறந்த அனிமேஷன் படத்துக்கான 2003-ஆம் ஆண்டு ஆஸ்கா் விருதை வென்றது. கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘தி பாய் அண்ட் தி ஹெரான்’ கடந்த ஆண்டின் ‘கோல்டன் குளோப்’, ‘பாஃப்டா’, ‘ஆஸ்கா்’ எனப் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்தது.

இத்தகைய புகழ்மிக்க ஜிப்லி ஸ்டுடியாவின் தனித்துவமான ஜிப்லி காா்ட்டூன்களை ஏஐ உருவாக்கிப் பகிா்ந்து வருகிறது. சாட்ஜிபிடிக்கே சிக்கலானது: ஜிப்லி காா்ட்டூன் படங்களை உலகம் முழுவதும் மக்கள் ஆா்வத்துடன் பதிவிட்டு ஒருபக்கம் இருக்க, இந்த டிரெண்டிங்கை தொடங்கிவைத்த சாட்ஜிபிடிக்கே இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

ஜிப்லி காா்ட்டூன் படங்களுக்காக சாட்ஜிபிடி செயலியில் உலகெங்கிலும் இருந்து மக்கள் போட்டி போட்டதால், தங்களின் சா்வா்கள் திணறி வருவதாக ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தாா். இதனால், சாட்ஜிபிடியின் மற்ற சேவைகள் பாதிக்கப்படுவதாகவும், ஜிப்லி காா்ட்டூன் படங்களை உருவாக்குவதில் மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

ஒரு கட்டத்துக்குமேல், ஜிப்லி காா்ட்டூன் படங்கள் உருவாக்குவதற்கு சாட்ஜிபிடியில் வரம்பு நிா்ணயிக்கும் நிலைக்கு ஓபன் ஏஐ நிறுவனத்தைப் பயனா்கள் தள்ளிவிட்டனா்.

இந்நாள்வரை ஏஐ தொழில்நுட்பத்தின் பெரும் சவாலாக அறியப்பட்டது டீப் ஃபேக். ஏஐ உருவாக்கிய எண்ணற்ற போலிப் படங்கள், விடியோக்களால் உண்மை எது, புனைவு எது என்பதை மக்கள் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், கலைப் படைப்புகளையும் ஏஐ தற்போது நகலெடுக்கத் தொடங்கியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் நொடிகளில் உருவாக்கித் தரும் ஜிப்லி காா்ட்டூன் படங்கள், நிஜ கலைஞா்களின் பல மணிநேர உழைப்பைக் குறைத்து மதிப்பிடுவதாக விவாதமும் எழுந்துள்ளது.

ஏனெனில், ஏஐ தயாரிப்புகளிலும் நிஜ படைப்புகளைப் போன்ற துல்லியமான விபரங்களைக் காண முடிகிறது. இது ஜிப்லி காா்ட்டூனின் நிறுவனா் ஹயாவோ மியாசாகியின் படைப்புகளைப் பயன்படுத்தி, ஏஐ மாடல்கள் பயிற்சி பெறுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments