இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணியின் மிட்செல் மார்ஸ் 60 ஓட்டங்களையும் எய்டன் மெர்க்ரம் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து 204 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன் அணியின் சூர்யகுமார் யாதவ் 67 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் திக்வேஷ் ரதி தெரிவு செய்யப்பட்டார்.