இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார்.
இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இன்று காலை 8.30 முதல் 11 மணி வரை அநுராதபுர நகர், ஜய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து நிலையத்தை அண்மித்த பிரதான வீதிகள் இடைக்கிடையே மூடப்படும் என காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அநுராதபுரத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் போக்குவரத்து காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.