இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது, ஆனால் பின்னர் அது குறைக்கப்பட்டது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, நிலநடுக்கம் அதிகாலை 2:48 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிமியுலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து 62 கி.மீ தென்கிழக்கே, கடல் மட்டத்திற்கு கீழே 30 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
“குறிப்பாக மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள பிராந்தியமான சிமியுலு ரீஜென்சியில், இதுவரை கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை” என்று மாகாண பேரிடர் தணிப்பு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்ட நாடாகும், இது அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு ஆளாகும் அதிக நில அதிர்வு மண்டலமாகும்.
இந்த நாடு 127 செயலில் உள்ள எரிமலைகளைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்து டெக்டோனிக் அசைவுகளை அனுபவிக்கிறது, இதனால் நிலநடுக்கத்திற்கு தயார்நிலை தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.
இதேவேளை அண்மையில் மியான்மரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.