ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரைலர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகி உள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ந் தேதி வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் இளசுககளை ஆட்டம் போட வைத்தது. ஆனால், ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் இல்லாதது அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. தற்போது, அனைவரின் எதிர்பார்ப்பும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மீதே உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால், தரமான ஒரு படத்தை நிச்சயம் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
குட் பேட் அக்லி படம் 10ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை குழுவின் சான்றிதழ் வெளியாகி உள்ளது. இப்படத்தை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் ‘யுஏ 16+’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடம் என்றும், படத்தில் பல இடத்தில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவை நீக்கப்பட்டுள்ளது என்றும், சில வார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது என்றும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் பிரசன்னா, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோஃப், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.