இந்திய திரையுலகின் பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். உலகளவில் அவர் பிரபலமானவராகவும் இருந்துவருகிறர். கடைசியாக அவர் அட்லீ இயக்கத்தில் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானுக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படம் அமையாமல் இருந்துவந்தது. அதனை மாற்றும் விதமாக 2023ஆம் ஆண்டு இருந்தது. அந்த வருடம் அவர் நடித்த பதான், ஜவான், டன்கி ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.அதிலும் ஜவான் திரைப்படத்தை சொல்லவே வேண்டாம்.அப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்து உலக முழுவதும் 1000 கோடி ரூபாயை வசூலித்தது.அதேபோல் அதற்கும் முன்னதாக நடித்திருந்த பதான் திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள்.
இந்நிலையில் ஷாருக்கான் அளித்திருந்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த அந்தப் பேட்டியில் பேசுகையில், “என்னுடைய தந்தையின் மரணம் என் சகோதரியை ரொம்பவே பாதித்துவிட்டது. தந்தை இறந்தபோது அவரது உடலின் அருகேயே எதுவும் பேசாமல் என்னுடைய சகோதரி நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த அதிர்ச்சியில் அப்படியே சரிந்து விழுந்தாள். அதற்கு பிறகு அவர் மன அழுத்தத்துக்கு சென்றாள்.
அதனையடுத்து நான் ஸ்விட்சர்லாந்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தேன். அந்த நேரத்தில்தான் என் சகோதரி இந்த மாதிரியான நிலைமையில் இருந்தார். அவர் பிழைக்கமாட்டார் என்றுதான் மருத்துவர்கள் எல்லாம் சொன்னார்கள். நான் உடனடியாக அவரை ஸ்விட்சர்லாந்தில் சிகிச்சை கொடுக்க அழைத்து சென்றுவிட்டேன்.
சூழல் இப்படி இருக்க என் தந்தை இறந்த பத்து வருடங்களில் அம்மாவும் இறந்துவிட்டார். அது மேற்கொண்டு என் சகோதரிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமின்றி கூடுதலான மன அழுத்தத்துக்குள் சென்றுவிட்டார்.
இதற்கிடையே தொடர்ந்து உழைத்து நான் வெற்றியடைந்து பிரபலமாகிவிட்டேன். ஆனால் இப்போதும் எனது மனதில் ஒரு தனிமை உணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களின் முன்பு ஒரு துணிச்சலை நான் போலியாக காட்டிக்கொண்டிருந்தேன். எனது சகோதரி என்றால் எனக்கு உயிர். அவரை எனது பிள்ளைகளும் ரொம்பவே நேசிக்கிறார்கள்” என்றார்.