நடிகர் சூர்யா தனது சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்கு விற்றதில் இருந்தே அவருக்கு எதிரான நெகட்டிவிட்டி தமிழ் சினிமாவில் அதிகம் பரவி வருகிறது என்கின்றனர். கஜினி, அயன், சிங்கம் வரிசை படங்கள் எல்லாம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. பாக்ஸ் ஆபீஸிலும் அப்போதே 100 கோடி வசூலை எல்லாம் தாண்டி அசால்ட்டு காட்டினார்.
ஆனால், சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் கொரோனாவை காரணம் காட்டி நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் மற்றும் பான் இந்தியா படமாக உருவாகி வெளியான கங்குவா உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை சந்தித்தன.
சூர்யாவின் கங்குவா படம் தோல்வியைத் தழுவிய நிலையில், ஜோதிகா மற்ற படங்களை கடுமையாக விமர்சித்தது என பல சர்ச்சைகள் சூர்யாவை சுற்றி அடித்து வரும் நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெரிதாக பில்டப் கொடுக்காமல் சூர்யா ரொம்பவே டோனை குறைத்து பேசியிருந்தார் என்கிற விவாதங்களும் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தில் இலங்கை தமிழர்கள் குறித்த தவறான வசனங்கள் இருப்பதாக சில விஷமிகள் கிளப்பி விட்டது வெறும் வதந்தி தான் என்றும் படத்தில் அதுபோன்ற எந்தவொரு சர்ச்சைக்குரிய வசனமும் இல்லை என நெருங்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ரெட்ரோவின் வெற்றி: சூர்யாவுக்கு எதிரான நெகட்டிவிட்டி தமிழ் சினிமாவில் இருந்து மாயமாக போகும் அளவுக்கு ரெட்ரோ படத்தின் வெற்றி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ டிரைலருக்கு 20 மில்லியன் ரசிகர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது என்கிற நிலையையும் ரெட்ரோ மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்துக்கு குட் பேட் அக்லி வெற்றிப் படமாக அமைந்த நிலையில், சூர்யாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் அடுத்த வெற்றியை ரெட்ரோ கொடுக்கும் என நம்பலாம்.