தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையக மக்களுடைய காணி உரிமை உறுதிசெய்யப்படுமென பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நேற்று (23) புதன்கிழமை இரத்தினபுரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மக்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எம்மை மக்கள் மத்தியில் சென்று விமர்சனம் செய்து வருகிறார்கள். அமைச்சர் ஒன்றையும் பிரதி அமைச்சர் ஒன்றையும் கூறுவதாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
கடந்த காலங்களில் இனவாதத்தை மூலதனமாக முன்வைத்து அரசியல் செய்து வந்தார்கள். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றினைந்து வாழகூடிய நாடாக தேசிய மக்கள் சக்தி மாற்றியிருக்கிறது. மலையக மக்கள் தென் இந்தியாவில் இருந்து மலையகத்திற்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன.
கடந்த 76 வருடங்கலாக எமது மக்களுடைய வாக்குகளை பெற்றவர்கள் மக்களுடைய வாக்குகளை மாத்திரம் பார்த்தார்களே தவிர அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கவில்லை. தேர்தல் காலப்பகுதியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கியவர்கள் பதவிக்கு வந்த பிறகு மக்களின் அபிவிருத்தியினை மறந்தார்கள்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி இந்த வரவு செலவு திட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சமனான நிதி ஒதுக்கீடு செய்து இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சமனான அந்தஸ்த்தை வழங்கியிருக்கிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் ஒரு போதும் இருந்தது கிடையாது. ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு பிரதிநிதியை பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்திய அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய 540வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அது மட்டுமின்றி கல்வி சுகாதாரம் போன்றவற்றிற்கு பாரிய நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளோம்.
கடந்த காலங்களில் எமது மக்களை தோட்ட மக்கள் என அழைத்தார்கள். சமூகத்தில் எமது மக்களுக்கான அந்தஸ்து வழங்கப்படவில்லை எமது தலைவர் அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் எமது மக்களுக்கான அங்கீகாரத்தை வழங்கினார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் வேட்பாளர்கள் 40 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய வெற்றி இன்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருடர்கள் இன்று அஞ்சுகிறார்கள் எமது அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்கள் சற்று பொறுத்திருங்கள். கடந்த காலங்களில் செய்த ஊழல்களுக்கு தண்டனை காத்திருக்கிறது .
இரத்தினபுரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு பாடசாலையில்லை. எமது மாவட்டத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு எமது அரசாங்கத்தின் ஊடாக 60 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கிடு செய்துள்ளோம். என குறிப்பிட்டார்.