ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்பட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள பிற கடமைகள், பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் எதிர்த்துப் போராட வேண்டும்.
நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.