10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா (323 ரன்), பிரப்சிம்ரன் சிங் (292), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென் மிரட்டுகிறார்கள்.
நடப்பு சீசனில் இரு அணிகளும் முல்லன்பூரில் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது
இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் சென்னையும், 15 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.