இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை.
காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுகிறது.
லாட்ருன், நெவ் ஷாலோம் மற்றும் எஸ்டோல் காடு பகுதிகளில் கடுமையான தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீ மேவோ ஹோரோன், பர்மா சாலை மற்றும் மெசிலாட் சியோன் போன்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தேசிய அவசரநிலையை அறிவித்தார்.