தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார். இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, துணை பிரதமர் சோய் சாங்மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜினாமா குறித்து ஹான் டக்-சூ கூறுகையில், எனக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று நான் இப்போது கையாளும் பெரிய பொறுப்பை முடிப்பது. மற்றொன்று அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வது. நான் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க என்னால் முடிந்ததைச் செய்வதற்கும், எனக்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கும் எனது பதவியைக் கைவிட இறுதியாகத் தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.