அரநாயக்க பொலிஸ் பிரிவின் அரம பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் அரநாயக்க, அரம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமானவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதான சந்தேக நபர் 40இற்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர் என எமது அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (04) மாவனெல்ல மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.