Sunday, May 25, 2025
HomeMain NewsSri Lankaவன்னியில் ஒரு பொலிஸ் குழு சிறுவனை ‘தூக்கி அடிப்பதாக’ அச்சுறுத்துகிறது

வன்னியில் ஒரு பொலிஸ் குழு சிறுவனை ‘தூக்கி அடிப்பதாக’ அச்சுறுத்துகிறது

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, சிவில் உடையில் தனது வீட்டுக்கு வந்த ஆண்கள், தமது பிள்ளைகளை அச்சுறுத்தியதால், தான் எவ்வாறு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை, வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் ஊடகங்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தானும் ஒரு கடத்தலுக்கு ஆளானதாகவும், அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகையில் பொலிஸார் இவ்வாறு நடந்துகொள்வது பெரும் அச்சுறுத்தல் என, முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முல்லைத்தீவு, சிலாவத்தை, தியோநகரைச் சேர்ந்த சந்திரமோகன் சந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் கடந்த மார்ச் மாதம் நான் கடத்தப்பட்டேன். அது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. ஆனால் இந்த சம்பவத்தின் பின்னர் சிஐடி பொலிஸ் பிரிவில் இருந்து வருகின்றோம். ஸபெசல் பிரான்ஜில் இருந்து வருகின்றோம் என கூறிக்கொண்டு எமது வீட்டுக்கு வருகை தந்து நாங்கள் இல்லாத நேரத்தில் சிறுவர்களான எமது பிள்ளைகளை அச்சுறுத்தும் தொனியில் கதைக்கின்றனர். இந்த வழக்கில்  பாதிக்கப்பட்ட தரப்பு நான்தான். ஆனால் அவர்களின் விசாரணைகள் என்னுடைய கடந்த காலத்தை பற்றியதுதானேத் தவிர எங்கள் வழக்கு தொடர்பானது அல்ல. எங்களுடைய பின்னணியையே தேடுகின்றனர். வழக்கு நடந்துகொண்டிருக்கையில் இவ்வாறு செயற்படுவது எங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு மன உளைச்சலையும் தருகிறது.”

மேலும், தான் வீட்டில் இல்லாத நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தனது வீட்டிற்குள் சிவில் உடையில் பொலிஸார் அதிகாரிகள் என கூறிக்கொள்ளும் ஒரு குழு வந்து, தனது பிள்ளைகளைத் திட்டி, அச்சுறுத்தியதாக காட்டும் சிசிடிவி காட்சிகளையும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார்.

சிசிடிவி காட்சிகளுக்கு அமைய, ஏப்ரல் 24 அன்று, மூன்று அதிகாரிகளும் சந்திரமோகன் சந்தியாவின் வீட்டிற்கு வந்து அவரது மகனிடம் அவரது தாய் எங்கே என கேட்கின்றார்கள்.

“அம்மா எங்கடா? அம்மா இல்லை அண்ணா. அம்மா வவுனியாவில்…. அடிச்சு மண்டைய உடைப்பேன். உங்களுடைய அம்மாவிற்கு கோல் பண்ணுடா. அம்மாவிற்கு சொல்லு பொலிஸ் வந்திருக்கு. எத்தனை மணியானாலும் நாங்கள் இருக்கின்றோம் என சொல்லு. நேற்று புல்லா வந்து பார்த்தால்… கோவம் வந்தால் தம்பி உன்னை தூக்கிப்போட்டு அடிப்பேன் விளங்குதா? செய்வது பிராடு வேலை, செய்துபோட்டு பதில் சொல்ல வேண்டும் விளங்குதா?

“உங்கள் அம்மா ஏன் பொலிஸ் சென்று முறைப்பாடு செய்தார்? என்ன முறைப்பாடு? அந்த பிரச்சினை அடித்தேன் என, கோல் பண்ணி வரச்சொல்லு, வவுனியாவில் வாராங்க, யாழ்ப்பாணம் வாராங்க… வொரன்ட் இருக்கு கைது செய்வாங்க, வந்தால் பிரச்சினையில்லை. வாராட்டி கைது செய்ய வேண்டி வரும்.”

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சந்திரமோகன் சந்தியா, தனது கடத்தல் தொடர்பான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பொலிஸார் இந்த கடத்தல் குறித்து விசாரணை செய்யாமல் தனது கடந்த காலம் தொடர்பிலான தகவல்களை கேட்பதாக குற்றம் சாட்டுகிறார்.

மேலும், ஏப்ரல் 24 ஆம் திகதி தனது வீட்டிற்கு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தனக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது, அன்றைய தினம் தான் வவுனியாவில் இருப்பதாகவும், வீடு திரும்பும்போது இரவு ஆகிவிடும் எனவும்  தெரிவித்ததாகவும், ஆனால் அவர்கள் தனது வீட்டிற்கு வந்து தனது இரண்டு பிள்ளைகளை அச்சுறுத்தியதாகவும் சந்தியா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments