கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதனால் சீனியர் வீரர்களான இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் பெர்த் போட்டியில் சதம் அடித்தாலும் விராட் கோலியின் சமீபகால ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை தாரைவார்த்து வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்தனர்.
இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கு முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார். ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட்கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட்கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகவும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட்கோலி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து பல முன்னாள் வீரர்களும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடாது என்று சமூக வலைதளம் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9230 ரன்கள் அடித்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை சொன்னால் இந்த வடிவம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வடிவம் என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவது நான் சுமந்து செல்லும் பாடங்களை கற்றுக்கொடுத்தது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று இருக்கிறது. அமைதியான மோதல், நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத சிறிய தருணங்கள், ஆனால் அவை எப்போதும் உங்களுடன் இருக்கும்.
நான் இந்த வடிவத்தில் இருந்து விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இது சரியானது என நினைக்கிறேன். நான் அதற்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது.
விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காக, வழியில் என்னைப் பார்த்ததாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.