தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட் டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி யன்று அவரவர் வங்கிக் கணக்கில் இந்த உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர்.
இதுவரை மூன்று கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு தகுதி வாய்ந்த பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், தகுதி பெறாதவர்களை கண்டறிந்து அதில் சிலரை நீக்கமும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மாதம் ரூ.1000 கிடைக்காத பெண்கள், எங்களுக்கும் மாதம் ரூ.1000 வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூன் மாதம் 4-ந்தேதி (அடுத்த மாதம்) மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் விடுபட்ட பெண்கள் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக இத்திட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற விவரங்களும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தற்போது குதூகலத்தில் உள்ளனர்.
ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணையலாம்.
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட சிலர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியில்லை.
சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.