சிங்கப்பூரில் வீட்டைவிட்டு வெளியேற்றிய தாயாருக்கு எதிராக மகள் தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமது பெற்றோரின் வீட்டில் 62 வயது திருவாட்டி ரீட்டா கிஷின்சந்த் போஜ்வானி கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
2021ஆம் ஆண்டில் அவரது தாயாரான 91 வயது திருவாட்டி மாயா கிஷின்சந்த் தமது மகளை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
தமது வாழ்நாள் முழுவதும் தமது பெற்றோரின் வீட்டில் வசிக்க தமக்கு உரிமை இருப்பதாக திருவாட்டி போஜ்வானி நீதிமன்றத்தில் வாதிட்டார்.
தமது மகனுடன் அவர் அந்த வீட்டில் 1994ஆம் ஆண்டிலிருந்து வசித்து வந்தார்.
2010ஆம் ஆண்டிலிருந்து தமது பெற்றோருடன் ‘தி சீஃபிரண்ட் ஆன் மேயர்’ கூட்டுரிமை வீட்டில் திருவாட்டி போஜ்வானி வசித்து வந்தார்.
திருவாட்டி போஜ்வானி திருமணமானவர்.
ஆனால் தமது கணவருடன் அவர் வசிக்கவில்லை.
தமது குடும்பத்துக்குச் சொந்தமான எச்விஎஸ் புரோப்பர்ட்டிஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடுத்தார்.
‘தி சீஃபிரண்ட் ஆன் மேயர்’ கூட்டுரிமை வீடு அந்நிறுவனத்துக்குச் சொந்தமானது.
திருவாட்டி போஜ்வானி தமது அண்ணனான திரு சுனிலுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தொடங்கியதை அடுத்து, பிரச்சினை தலைதூக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமது மகளின் செயல்களுக்கு அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்தார்.
திருவாட்டி போஜ்வானியை அவர் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.
திருவாட்டி போஜ்வானி நியாயமற்ற வகையில் நடந்கொண்டதாக திருவாட்டி மாயா, திரு சுனில் ஆகியோரைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்கள் கூறினர்.
குடும்ப உறுப்பினர்களைத் திருவாட்டி போஜ்வானி அடிக்கடி காணொளி எடுத்ததாகவும் வீட்டில் உள்ள பணிப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தபால்பெட்டியின் பூட்டை மாற்றியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களுக்குப் பிறகு சொத்துகள் அனைத்தும் தங்கள் மகனுக்குச் செல்ல வேண்டும் என்று திரு கிஷின்சந்த் திலூமல் போஜ்வானியும் அவரது மனைவி திருவாட்டி மாயா கிஷின்சந்தும் உயில் எழுதியதை அடுத்து, திருவாட்டி போஜ்வானியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாக வழக்கறிஞர்கள் கூறினர்.
திரு கிஷின்சந்த் திலூமல் போஜ்வானி 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.
திருவாட்டி போஜ்வானியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 5 மில்லியன் அமெரிக்க டாலர் (S$6.5 மில்லியன்) டிரஸ்ட் நிதி அமைத்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்தார்.
இருப்பினும், ரொக்கத்துக்கும் சொத்துக்கும் தமது மகள் அடிபோடுவதாக அவர் கூறினார்.
தமது தாயாருக்கு எதிராகத் திருவாட்டி போஜ்வானி தொடுத்த வழக்கை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கான முடிவை நீதித்துறை ஆணையர் கிறிஸ்டஃபர் டான், ஏப்ரல் 28ஆம் தேதி எழுத்துபூர்வமாக வெளியிட்டார்.
திருவாட்டி போஜ்வானி போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றார் அவர்.
அதுமட்டுமல்லாது, அவர் முன்வைத்த ஆதாரங்கள் நம்பகத்தன்மையற்றதாக இருந்ததாகவும் அவற்றில் போதுமான விவரங்கள் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தமது நிலைப்பாடுகள், கூறிய கருத்துகள் ஆகியவற்றை திருவாட்டி போஜ்வானி அடிக்கடி மாற்றியதாகவும் அவர் கூறினார்.