வெஸ்ட் கோஸ்ட், மரினா சவுத் படகுத்துறைகள்வழி சிங்கப்பூர் வருவோர் விரைவில் எல்லையைக் கூடுதல் விரைவில் கடக்க முடியும்.
அதற்கு வகைசெய்ய வரும் 2027ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் கோஸ்ட், மரினா சவுத் படகுத்துறைகளில் தானியக்க குடிநுழைவுச் சோதனை முறைகள் நடைமுறைப்படுத்தப்படும். திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் தானியக்க சோதனை முறைகள் செயல்படுத்தப்படும்.
சாங்கி பாயின்ட் படகு முனையத்திலும் புதுப்பிப்பு, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், அங்கு தானியக்க குடிநுழைவுச் சோதனை முறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.
வெஸ்ட் கோஸ்ட், மரினா சவுத் படகுத்துறைகளில் பயணிகள் தற்போது அதிகாரிகள் கவனிக்கும் சாவடிகளில் குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்க வேண்டும். அந்தச் சாவடிகள் கட்டங்கட்டமாகத் தானியக்கச் சாவடிகளாக மாற்றப்படும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டத்தில் அதிகாரிகள் கவனிக்கும் சாவடிகள் தொடர்ந்து செயல்படும்.
பணிகள் நிறைவடைந்ததும் வெஸ்ட் கோஸ்ட், மரினா சவுத் படகுத்துறைகள்வழி சிங்கப்பூருக்கு வருகை தருவோர் தானியக்க குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தானியக்க சோதனை முறையின் கீழ் பயணிகள் முதலில் தங்கள் கடப்பிதழ்களை வருடிவிட்டு பிறகு முக, கண் அடையாளச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
தானியக்கக் குடிநுழைவுச் சோதனைகளைக் கட்டங்கட்டமாகச் செயல்படுத்துவதன் மூலம் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அதன் அதிகாரிகளை வேறு பணிகளை மேற்கொள்ள நியமிக்க முடியும்.
குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளைக் கவனிப்பதற்குப் பதிலாக அதிகாரிகளுக்கு, பயணிகளின் விவரங்களை ஆராய்ந்து கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய பயணிகளை அடையாளம் காணும் பொறுப்பு அளிக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூருக்கு வந்த கிட்டத்தட்ட 14 மில்லியன் பயணிகள் கடப்பிதழின்றி ஆகாய, கடல் குடிநுழைவு சோதனைச்சாவடிகளைக் கடந்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையமும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் சம்பந்தப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப் பலதரப்பட்ட அம்சங்களைக் கையாளும் ஆலோசனைக் குழுவை நாடுவதாக அரசாங்கத்தின் செயல்பாட்டுப் பணிகளுக்கான (procurement) GeBiz இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.