விவோ நிறுவனம் சீனாவில் S30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மாடல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இந்த சீரிசில் பேஸ் விவோ எஸ்30 மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி என இரண்டு வேரியண்ட்கள் அடங்கும். இந்த மாடல்கள் முறையே 6.31-இன்ச் மற்றும் 6.67-இன்ச் பிளாட் ஸ்கிரீன்களைக் கொண்டிருக்கும். இரண்டு மாடல்களும் தலா 6,500mAh பேட்டரிகளைக் கொண்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவோ எஸ்30 ப்ரோ மினி மற்றும் விவோ எஸ்30 ஆகியவற்றின் டிஸ்ப்ளே பேனல்கள் அருகருகே இருப்பது போல் உள்ளது. இரண்டு போன்களிலும் தட்டையான திரைகள், மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக திரையில் நடுவில் பஞ்ச் ஹோல் ஸ்லாட் காணப்படுகின்றன. இரண்டு மொபைல்களிலும் உள்ள பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளன.
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஏற்கனவே வழங்கிய தகவலின் படி, விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டு இருக்கும். மற்றொரு டிப்ஸ்டர் கூறும் போது, இந்த ஸ்மார்ட்போனில் “உயர் செயல்திறன் கொண்ட பிராசஸர்” மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
விவோ எஸ்30 சீரிசின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.