Friday, May 23, 2025
HomeSportsவிராட் கோலி முன்னதாகவே ஓய்வு பெற்றது ஏன்? கிரிக்கெட் வாரியம் மீது அதிருப்தி

விராட் கோலி முன்னதாகவே ஓய்வு பெற்றது ஏன்? கிரிக்கெட் வாரியம் மீது அதிருப்தி

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

அதைதொடர்ந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

தற்போது 1 வாரத்துக்குள் இருவருமே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி விளையாடுவார்கள்.

இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.

இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறும்போது, ‘இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய ‘ஏ’ அணி அங்கு செல்கிறது. இந்த அணியில் விளையாடி 3 முதல் 4 சதங்கள் அடிக்க கோலி விரும்பினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆர்வத்தில் அவர் இருந்தார்’ என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு கோலி ரஞ்சி டிராபியில் ஆடினார். இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் தான் இருந்தார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மீது அவருக்கு இருந்த அதிருப்தி, ரோகித்சர்மாவின் ஓய்வு போன்றவற்றால் கோலி முன்னதாகவே ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்.

ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் இந்திய வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்து பயணத்தின் போதும் இதே கட்டுப்பாடு இருக்கும். இதனால் பி.சி.சி.ஐ. மீது அவர் அதிருப்தியில் இருந்தார்.

மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரராக விராட் கோலி மட்டுமே இருப்பார். இந்த டெஸ்ட் தொடருக்கு சுப்மன்கில் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம். இளம் வீரரின் கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தனது ஓய்வு முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மட்டும் தன்னை மீண்டும் கேப்டனாக நியமிக்குமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதாகவும், அதை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரிடம் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பி.சி.சி.ஐ. வேண்டுகோளை நிராகரித்து டெஸ்டில் இருந்து நேற்று விடைபெற்றார்.

14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. பல்வேறு சாதனைகளை புரிந்து சாதித்து இருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments