பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். ஹெசன் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஏஎல்) நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
50 வயதான இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி கூறியதாவது:-
பாகிஸ்தானின் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது நிபுணத்துவத்தையும் தலைமையையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று நக்வி கூறினார்.
பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளராக முன்பு நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன், கில்லஸ்பி உள்ளிட்டோர் சில நாட்களிலேயே பதவியில் இருந்து விலகிய நிலையில், இடைக்கால பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.