பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றியது.
இதே போன்ற நடவடிக்கையை பாகிஸ்தானும் எடுத்தது.
இருநாடுகளும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பரம் நடவடிக்கை எடுத்தன.
மேலும், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இருநாடுகளும் ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின.
இந்த மோதல் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
அதேவேளை, இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50ல் இருந்து 35 ஆக மத்திய அரசு குறைத்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறும்படி பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூதரக நடவடிக்கைகளுக்கு வெளியே வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை விட்டு 24 மணிநேரத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியின் பெயர், தூதரகத்தில் அவர் மேற்கொள்ளும் பணி உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.