உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார்.
தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில், “ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஜூன் 20-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.