வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு, கட்சி பேதங்களையும், வீண் பேச்சுகளையும் விடுத்து அதற்கான செயல்களில் களமிறங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாத்தறை – ஊராபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதன் மூலம், விழுந்துள்ள படுகுழியிலிருந்து மீள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டு முதல் நாம் கடனை மீளச் செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தது.
எனினும், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதனை 2028 ஆகக் குறைத்து இணக்கப்பாட்டை எட்டியது.
எனவே, 2028 ஆம் ஆண்டுக்குள், கடனை அடைக்க அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சி எமக்குத் தேவையாகவுள்ளது.
5 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பேணிச் செல்ல வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அரச வருவாயை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டுக் கையிருப்புக்களை அதிகரிக்க வேண்டும்.
இவற்றைச் செய்ய முடியாவிட்டால், நமது நாடு மீண்டும் ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான துயரத்தை நோக்கிச் செல்லும்.
நாடு வீழ்ச்சி கண்டால், அது அரசியல், இன, மத அல்லது வர்க்க வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் பாதிக்கும்.
நாட்டிற்குப் பெறுமானம் சேர்க்கும் நடவடிக்கை கல்வி மற்றும் சுகாதாரம், தொழில், விவசாயம், சேவைகள் போன்ற துறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும் எனவும் வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது, செயல்களாலும் அபிவிருத்தியை யதார்த்தமாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.