ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல உணவு முறை, தூக்கம், மனநலம் ஆகிய இம்மூன்றும் மிகவும் முக்கியமானது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
உணவு முறை
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
உங்கள் உணவில் புதிய பருவகால பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நொறுக்குத் தீனி மற்றும் சர்க்கரையைத் முழுமையாக தவிர்த்துவிட வேண்டும். எல்லாவற்றையும் விட முதன்மையானது எந்த வேலையாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி போதுமான அளவு தண்ணீர் குடித்து, சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். இப்படி செய்தாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.
தூக்கம்
தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பகல் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு இரவு வெகுநேரம் வரை நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, அதிக நேரம் சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடுவது போன்றவை போதிய தூக்கம் இல்லாமல் உடல் நலத்தை மோசமாக பாதிக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களிடையே தூக்கம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது.
நல்ல தூக்கம் என்பது நம் உடலையும் மூளையையும் புதுப்பிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் 7- 8 மணிநேரம் நல்ல தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். படுக்கைக்கு முன் திரை நேரத்தைக் குறைத்து, உறக்க அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள்.
மனநலம்
ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு மனநலமும் முக்கியமானது. பெரும்பாலான நேரங்களில் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர்.
மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன பிரச்னைகள் நம் வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே, மன ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா மற்றும் தியானம் முதலானவற்றை செய்ய வேண்டும்.
சமூக உறவுகளை உருவாக்கி உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். உங்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்னை இருப்பதாக உணர்ந்தால், தேவைப்பட்டால் உடனடியாக மனநல நிபுணரை அணுகவும்.