இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வோல்ட்டின் அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், விடுமுறையை கழிப்பதற்காக தாய் நாடான சுவிட்சர்லாந்திற்கு சென்றிருந்த போது தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டிருந்தன.
அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமண மோதிரம் உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தது. இந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 45 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரபூர்வ இல்லத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இருவர் இணைந்து இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளனர். போலியான சாவியொன்றை பயன்படுத்தி தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த போலி சாவியை செய்து கொடுத்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.