அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் சுங்கக் கட்டணங்கள், உலக வர்த்தகத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கையினால் சுவிட்சர்லாந்தின் பொருளாதார வளர்ச்சியை நெடுங்கால சராசரியைவிடக் குறைவாக காணப்படும் என UBS வங்கி வெளியிட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அறிவித்த சுங்கக் கட்டணங்கள், உலகளாவிய பொருளாதார மந்தநிலையை உருவாக்கவில்லை என்றாலும், வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2025ல் சுவிஸ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1% மட்டுமே இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2026ல் இது 1.2% ஆக சிறியளவில் உயரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டாண்டுகளிலும், வளர்ச்சி விகிதங்கள் சுவிஸ் நாட்டின் நீண்டகால சராசரியைவிட குறைவாகவே காணப்படும் என UBS தெரிவித்துள்ளது.
வேலையிழப்பு விகிதம் 3% ஐத் தாண்டும் எனவும், இது நாடு முழுவதும் பணிக்குழப்பங்களை உருவாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
UBS நடத்திய ஆய்வில் வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள் கொண்ட 800 சுவிஸ் நிறுவனங்களில், 70% நிறுவனங்கள் டிரம்ப் அறிவித்த சுங்கக் கட்டணங்கள் தங்களின் வியாபாரத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்தும் என பதிலளித்துள்ளன.