1993 ஆம் ஆண்டு வெளியான ‘கள்நாயக்’ திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக இது அமைந்தது.
ஆனால் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சோலி கீ பீச்சே’ பாடலுக்கு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்று தற்போது பல பேருக்குத் தெரியாது.
சுபாஷ் கெய் தயாரித்த ‘கள்நாயக்’ படத்தின் முதல் பாடல் வெளியானதும் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ‘சோலி கீ பீச்சே’ என்ற அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள் ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு பாரம்பரியவாதிகளைக் கொதிப்படையச் செய்தது. மேலும் அப்போது இந்தப் பாடலுக்கு 32 அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
மாதுரி தீட்சித் நடனத்தில் வெளியான இந்தப் பாடலுக்கு சரோஜ் கான் நடன ஆசிரியராக இருந்தார். அல்கா யாக்னிக் மற்றும் இலா அருண் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தனர். பாடலின் வரிகளைப் பிரபல எழுத்தாளர் ஆனந்த பாக்ஷி எழுதியிருந்தார். இந்தப் பாடலை இசையமைப்பாளர்கள் லட்சுமி காந்த் – பியாரேலால் இணைந்து இசையமைத்திருந்தனர்.
இந்தப் பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பினாலும், அதே அளவிற்கு சூப்பர் ஹிட் பாடலாகவும் உருமாறியது. வெளியான ஒரே வாரத்தில் சுமார் 1 கோடி கேசட் விற்பனையானது. 32 வருடங்களுக்கு முன் 1 கோடி கேசட் என்பது சாதாரண விற்பனையல்ல.
வெறும் கண்டனங்களோடு மட்டும் இந்தப் பாடல் நின்றுவிடவில்லை. இந்தப் பாடல் நாடாளுமன்றத்திலும் விவாதப் பொருளானது.
அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தடை செய்யப்பட்ட போதிலும் இந்தப் பாடல் பாலிவுட்டின் ஐகானாக மாறியது. ஒரே இரவில் மாதுரி தீட்சித்தைப் பிரபலமாக்கியது. மேலும் இந்தப் பாடலில் மாதுரியுடன் நடனமாடிய நீனா குப்தா, தனது சுயசரிதையில் இந்தப் பாடல் குறித்து பலவற்றைக் கூறியுள்ளார்.