ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க இரு நாட்கள் பயணமாக இன்று வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் மன்னார் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர் கொன்னையன் குடியிருப்பு காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு சௌத்பார் காற்றாலை மின்சார திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவார்.
இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர் பிற்பகல் 2 மணியளவில் வேலணை ஐயனார் கோயில் முன்றலில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்பார். பின்னர், அன்று பிற்பகல் 4 மணியளவில் மானிப்பாய் மருதடி விநாயகர் கோயில் வளாகத்தில் வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் பொங்கல் விழாவில் பங்கேற்பார்.
நாளை வெள்ளிக்கிழமை தென்மராட்சி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெறவுள்ள ‘தமக்கான இடம் அழகிய வாழ்க்கை’ இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்தும் வீட்டுத் திட்டத்தில் பங்கேற்பார். இதன்போது, பயனாளர்களுக்கு நிவாரண நிதி காசோலைகளை வழங்கி வைப்பார்.
பின்னர், பிற்பகல் 2 மணிக்கு கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறவுள்ள போதைப்பொருட்களுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய கருத்திட்ட நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார்.
