இலங்கை பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து முழுமையான ஆதரவு – சர்வதேச நாணய நிதியம் உறுதி

“இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்.) தனது முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும்”, என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உறுதியளித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 2026ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

அண்மையில், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு மத்தியில் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மன உறுதியை பாராட்டிய அவர், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் துணை நிற்கும் – என்றும் ஜோர்ஜிவா கூறினார்.

டித்வா சூறாவளியால் இலங்கையின் உட்கட்டமைப்பு, விவசாயத்துறைக்கு சுமார் 410 கோடி அமெரிக்க டொலர் (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம்) நேரடி சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், சூறாவளியால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளை விரிவாக மதிப்பிடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழு ஒன்று நாளை வியாழக்கிழமை நாட்டுக்கு வரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டாவோஸில் நடக்கும் மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய மறுசீரமைப்பு பணிகள், பொருளாதார நிலைமை தொடர்பில் இந்த சந்திப்பில் பேசப்பட்டன.

அத்துடன், சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்த சந்திப்புகளில் தொழில் அமைச்சர், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles