
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
முதல் முறையாக 13ஆயிரத்து 364 பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இவர்களில் சுமார் 4,000 பக்தர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தனர்.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழா கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூபப் பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில் பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன
தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்
இலங்கை-இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

















