உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு, கடிதம் ஒன்றின் ஊடாக இதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவால் பெயரிடப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பொலிஸ் சிரேஸ்ட அதிகாரிகளான சிசிர மெண்டிஸ், நிலந்த ஜெயவர்தன, நந்தன முனசிங்க, லலித் பத்திநாயக்க, தேசபந்து தென்னக்கோன், வசந்த விக்ரமசிங்க, பி.எல். பெரேரா மற்றும் ஏ.எஸ். லத்தீப் ஆகியோர் அடங்குவர்.
இந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தமது பரிந்துரைகளுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு குறித்த கடிதத்தின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

