யாழ்.பழைய பூங்காவில் உள்ளக அரங்கு அமைக்க தடையை நீடித்தது நீதிமன்றம்!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை யாழ். மாவட்ட நீதிமன்றம் விலக்கிக் கொண்டமையை ஆட்சேபித்து வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மற்றும் மேன்முறையீட்டு மனு ஆகியவற்றைப் பரிசீலனைக்கு எடுத்த மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம், மீளாய்வு மனு மற்றும் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடையும் வரை இந்தக் கட்டுமானத்துக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்து இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இரண்டு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் இன்று காலை இந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.

யாழ். பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கைப் பரிசீலித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், முதலில் அந்தக் கட்டுமானத்துக்கு எதிராக இரண்டு வார கால இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை வழங்கி இருந்தது. எனினும் பின்னர் அந்த இரண்டு வார காலம் முடிவடைந்ததும், புதிய சட்ட வாதங்கள் எதனையும் செவிமடுக்காமல், தன்பாட்டில் அந்த இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் விடுக்கும் கட்டளையை மாவட்ட நீதிமன்றம் வழங்கி இருந்தது.

அதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு முறையீடும் செய்யப்பட்டன. அந்த இரண்டு மனுக்களையும் மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடியிருந்தார்.

இந்த விவகாரத்தை ஒட்டி தன்னுடைய கட்டளையை மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் இன்று வழங்கி இருக்கின்றது.

இந்த மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை மேற்படி கட்டுமானத்துக்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்த்து நீடிக்கும் என்று மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் தன்னுடைய இன்றைய உத்தரவில் தெளிவாகக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது.

இந்த மீளாய்வு மனுத் தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு அளித்து எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவும் தொடர்ந்து விசாரணைக்கு முன்னெடுப்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக மன்றில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் திணுக்கா சுந்தரராஜன், மகாதேவன் ரஜீவன், ரவிக்குமார் மயூரி, கணபதிப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி மன்றில் வாதாடியிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles