கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண’ பிரிவின் பள்ளிக்குடா கடற்படை வரிசைப்படுத்தல் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்குடா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கப் வாகனம் ஒன்றைக் கடற்படையினர் வழிமறித்துச் சோதனை செய்தனர்.
இதன்போது, எவ்விதமான சட்டபூர்வ அனுமதியுமின்றி கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2000 கடல் அட்டைகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த வாகனத்துடன் மூன்று சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 54 வயதுக்குட்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கப் வாகனம் என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் கிளிநொச்சி மாவட்ட மீன்பிடி நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
