“ஹோர்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. எனவே, அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறினார்.
ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை மிக விரைவில் திறக்கும். அது எளிதாக இருக்காது என்றாலும், நாங்கள் அதை மிக விரைவில் திறப்போம். ஹார்முஸ் ஜலசந்திக்கு கட்டணம் விதிக்க நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. அவர்கள் கட்டணம் விதிக்க நினைத்தால், நாங்கள் அதை நடக்க விடமாட்டோம்” என்று கூறினார்.
முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சர்வதேச நீர்வழிகளைப் பயன்படுத்தி உலகை குறுகிய காலத்திற்கு மிரட்டிப் பணம் பறிப்பதைத் தவிர, தங்களிடம் வேறு எந்த ஆயுதமும் இல்லை என்பதை ஈரானியர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே அவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்.
சண்டையிடுவதை விட, போலி செய்தி ஊடகங்களையும், விளம்பரப்படும் மக்கள் தொடர்புகளையும் கையாள்வதில் ஈரானியர்கள் சிறந்தவர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஈரானின் நாடாளுமன்ற தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் இப்ராஹிம் அஜிஜி, நாடாளுமன்ற முன்மொழிவின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானின் தேசிய நாணயமான ரியாலில் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 8-ம் தேதி தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.
லெபனான் மீதான தாக்குதல்களை குறைத்துக் கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று வான்வழித் தாக்குதல்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று கள நிலவரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே, லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
