உத்தர பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக்
பூசியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரின் குர்ஜா நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு ஜீது சைனி என்பவரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சைனியின் முகத்தில் அவரது நண்பர்கள் சிலர் கேக் பூசினர் என கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டhர் என கூறப்படுகிறது.
இது குறித்து புலந்த்சாஹர் மாவட்ட பொலிஸ் அதிகாரி கூறும்போது –
‘துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் கிடைத்ததும் குர்ஜா நகர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 இளைஞர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர் மருத்துவர்கள் அறிவித்தனர்.
தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கைதுசெய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளில் ஒருவரது பிறந்த நாளின் போது கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில சந்தேகநபர்களை பொலீஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.
