ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக் கிளையில் கக்ரா கணக்கு வைத்திருந்தார். அதில் இருந்த ரூ.19,400ஐ எடுப்பதற்காக ஜீத்து முண்டா வங்கிக்குச் சென்றுள்ளார்.
கல்வியறிவு இல்லாத பழங்குடியினரான ஜீத்து முண்டாவிடம், அவரது சகோதரியின் இறப்புச் சான்றிதழ் அல்லது வாரிசுச் சான்றிதழ் இல்லை. இதனால், கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
சட்ட நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் விரக்தியடைந்த ஜீத்து முண்டா, கடந்த திங்கட்;கிழமை மயானத்திற்குச் சென்று தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, எலும்புக்கூடை துணியால் சுற்றி தோளில் சுமந்தபடி 3 கிலோ மீற்றர் தூரம் நடந்து வங்கிக்கு சென்றார்.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது வங்கியின் மனிதாபிமானமற்ற செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஒடிசா கிராமின் வங்கி தனது எக்ஸ் தளத்தில், ”இறந்தவர் நேரில் வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தாகக் கூறப்படும் தகவல் தவறானது.
சட்டப்படியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வழங்க முடியவில்லை. அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் நடைமுறைகளை விளக்கிக் கூறியும் அவர் ஏற்கவில்லை.
தற்போது அரசு அதிகாரிகள் வழங்கிய வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில், ரூ.19,402 தொகை 3 வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், ”வங்கி அதிகாரிகள் கிராம பஞ்சாயத்துத் தலைவரிடம் விசாரித்தாலே உண்மை தெரிந்திருக்கும். ஆவணங்களுக்காக ஓர் ஏழை மனிதரை இவ்வளவு தூரம் அலைக்கழித்தது வேதனைக்குரியது” என்றனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தில், பொலிஸாருக்கும் உள்ளூர் அதிகாரிகளும் தலையிட்டு முண்டாவை சமாதானப்படுத்தினர், மேலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் அவருக்கு உறுதியளித்தனர். அதிகாரிகள் அவருக்கு உதவியாக 30,000 ரூபாயையும் வழங்க முன்வந்தனர். மேலும், அரசு அதிகாரிகள் இறப்புச் சான்றிதழையும் சட்டப்பூர்வ வாரிசு ஆவணங்களையும் ஜீத்து முண்டாவிடம் வழங்கினர்.
