சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பிய ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்கள், நேற்று புதன்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள், விண்வெளிப் படை மற்றும் ஈரான் போர் போன்ற தலைப்புகள் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாசா நிறுவனத்தைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கனடிய விண்வெளி முகமையின் ஜெரமி ஹேன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் நீல நிற சீருடை அணிந்து ஜனாதிபதி ட்ரம்பைச் சந்திக்க வந்திருந்தனர்.
விண்வெளி வீரர்களின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி ட்ரம்ப், ‘அவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதைச் செய்ய விரும்பமாட்டேன், ஆனால் நமது நாட்டைப் பெருமைப்படுத்த இத்தகைய மனிதர்கள் தேவை’ என்று கூறினார்.
இங்கு தனது முன்னுரிமைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை வெளியிடத் தான் எதிர்பார்ப்பதாகவும், தனது ஆட்சிக் காலத்தில் மற்றுமொருவர் சந்திரனில் நடப்பதற்குச் சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ் III திட்டத்தைத் தொடங்குவதற்கும், 2028ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் உறுதிப்படுத்தினார். அத்துடன் நாசா தலைமையகத்தை வாஷிங்டன் டி.சி.யிலேயே வைத்திருப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது உடன்பட்டார்.
