சிங்கப்பூரில் இஸ்தானாவை நோக்கிப் பலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்திய 3 பெண்களுக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில் இஸ்தானாவை நோக்கிப் பலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்திய குற்றச்சாட்டிலிருந்து 3 பெண்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசுத் தரப்பு செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து அவர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொசமாத் சொபிக்குன் நஹார் (26 வயது), சித்தி அமிரா முகமது அஸ்ரொரி (30 வயது), அண்ணாமலை கோகிலா பார்வதி (37 வயது) ஆகிய மூவருக்கும் ஒவ்வொருவருக்கும் 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மூவரும் 2024 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிபிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையே இஸ்தானா அருகே பேரணி நடத்தினர் என குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் பேரணி நடத்திய பாதை தடைசெய்யப்பட்ட பகுதி என்பது பெண்களுக்குத் தெரியாது என்பது வழக்கு விசாரணையில் தெரியவந்ததாக மாவட்ட நீதிமன்றம் சொன்னது.
அவர்கள் பயன்படுத்திய பாதை பொதுமக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் நடைபாதை என்றும், அது தடைசெய்யப்பட்ட பகுதி என்பதைக் காட்டும் அடையாளமோ அறிவிப்போ அங்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகையப் பேரணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிந்தும் பெண்கள் பேரணியை மேற்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் கூடுதலாக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கூறியது.
இது வழக்கு விசாரணையில் சட்டரீதியான சோதனை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதனால் தவறுகள் ஏற்பட்டதாகவும் உயர் நீதிமன்றம் சொன்னது. இதையடுத்து மூன்று பெண்களுக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
