திறைசேரியிலிருந்து 25 லட்சம் அமெரிக்க டொலர் திருடப்பட்டமை தொடர்பான விசாரணைகளில் அமெரிக்காவின் புலனாய்வுப் பணியகத்தின் (எவ்.பி.ஐ.) உதவியை நாடுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
இதற்காக, இணையவழித் தாக்குதல்கள் மற்றும் தரவுத் திருட்டைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற ஓர் அமெரிக்க இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விசாரணைகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகளும் இலங்கைக்கு ஆதரவளித்து வருவதால் இது ஒரு சர்வதேச அளவிலான விசாரணையாக உருவெடுத்துள்ளது.
இந்த மோசடி மின்னஞ்சல்களின் மூலம், திருடப்பட்ட பணத்தின் தற்போதைய இருப்பிடம் அல்லது இந்த வலையமைப்புக்குப் பின்னால் உள்ள நபர்கள் குறித்து இதுவரை எந்தவொரு குறிப்பிட்ட தகவலும் வெளியிடப்படவில்லை.
மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவும் இவ்விடயம் குறித்து மேலும் விசாரித்து வருகிறது.
.
ஜனவரி மாதத்திலிருந்தே இந்த இணையவழித் தாக்குதல் குறித்து நிதி அமைச்சுக்குத் தெரிந்திருந்தாலும் இது குறித்த முதல் முறைப்பாடு மார்ச் 28 அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, அதன் பின்னர் முறையான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இணையவழித் தாக்குதலில் பிற நாடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் தொடர்பான ஆவணங்களும் திருடப்பட்டிருக்கலாம் அல்லது நகலெடுக்கப்பட்டிருக்கலாம் என்று திறைசேரி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றத்துக்கும் முன்பு மின்னஞ்சல்களையும் தரவுகளையும் கடுமையாகச் சரிபார்க்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸிலிருந்து பெறப்பட்ட கடன் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போயுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகளை நிதி அமைச்சு மறுத்துள்ளது. அந்தச் செய்தி தவறானது என்றும் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் அமைச்சு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
