தமிழ்நாடு ஆளுநர் த.வெ.கவை ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க. அவகாசம் கோரிய நிலையில், தற்போதே பெரும்பான்மைக்கு தேவையான 118 உறுப்பினர்களின் பட்டியலை வழங்க ஆளுநர் அறிவுதினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட த.வெ.க. முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில், மக்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணமாக வைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளது.
