ஈரான் போருக்கு உதவும் வகையில், ஈராக்கின் பாலைவனப் பகுதியில் இஸ்ரேல் இராணுவத் தளம் அமைத்துள்ளது. இதை ஈராக் படையினர் கண்டுபிடித்தபோது, அவர்களை விரட்டியடிக்க இஸ்ரேல் வான் தாக்குதலையும் நடத்தியுள்ளது.
ஈராக்கின் மேற்கு பாலைவனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்டம் இருக்காது. கடந்த 1991-2003ஆம் ஆண்டுகளுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டபோது, அமெரிக்க ராணுவம் இப்பகுதியை ராணுவத் தளமாக பயன்படுத்தியது.
இப்பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் ஈராக்குக்கு தெரியாமல் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது. பாலைவனப் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் வருவதைப் பார்த்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் அப்பகுதியில் ராணுவ நடமாட்டம் குறித்த தகவலை ஈராக் அதிகாரிகளிடம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதிக்கு ஈராக் படையினர் சென்றனர். ஆனால் அவர்களை அங்கு நெருங்கவிடாமல் இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தி விரட்டியதாக தி வோல் ஸ்ட்ரீட் இதழ் செய்தி வெளியாகியுள்ளது.
ஈராக்கில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்திருந்த தகவல் அமெரிக்காவுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஈரான் மீது இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதலை கடந்த ஏப்ரல் மாதம் நடத்தின. அப்போது ஏதாவது போர் விமானம் ஈரான் பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டால், அங்கு மீட்பு பணியை மேற்கொள்வதற்காக மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைத்துள்ளது.
அமெரிக்காவின் எப்-15 ரக போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, ஒரு விமானப்படை வீரர் ஈரானில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்பதற்கும், அமெரிக்க படைகளுக்கு ஈராக்கில் உள்ள முகாமில் இருந்து தேவையான உதவிகளை இஸ்ரேல் அளித்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
ஈராக் மண்ணில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைத்து, ஈராக் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐ.நா.வில் ஈராக் கடந்த மார்ச் மாதம் இறுதியில் புகார் அளித்தது. ஈராக்கில் உள்ள ராணுவ முகாம்களை பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கில் பல தாக்குதல்கள் நடத்தினர். ஆனால் ஈராக் வீரர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்தது.
