சுமார் 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் பிரம்மாண்டமான தாவர உண்ணி டைனோசர் இனத்தின் எச்சங்கள் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“நாகடைட்டன் சையஃபுமென்சிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைனோசர் இனம், தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சௌரோபாட் இனத்தைச் சேர்ந்த இந்த டைனோசர், நீண்ட கழுத்து, நீண்ட வால், சிறிய தலை மற்றும் தூண் போன்ற நான்கு கால்களைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் உடல் நீளம் சுமார் 90 அடி (27 மீற்றர்) வரை இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்த இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள், தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சையஃபுமென்ச் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமவாசியால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, டைனோசரின் புஜ எலும்பு மற்றும் தொடை எலும்பின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு அதன் எடை சுமார் 25 முதல் 28 டன் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தலை மற்றும் பற்கள் மீட்கப்படாத போதிலும், மற்ற சௌரோபாட் இனங்களைப் போலவே இலைகள் மற்றும் ஊசியிலை மரங்கள் போன்ற தாவரங்களை அதிகளவில் உணவாக எடுத்துக்கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
