உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கும் பிரதமர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் பிரதமர் ஸ்டார்மர் தொலைபேசியில் உரையாடிய போதே இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்ய எண்ணெய் தடைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் விமர்சனங்களை எதிர்கொண்ட அதே நாளில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கு பிரித்தானியா உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக உலக சந்தையில் ரஷ்ய எண்ணெய் குறைவாக இருக்கும் என்றும் பிரதமர் ஸ்டார்மர் செலென்ஸ்கிக்கு எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவின் இந்த ஆதரவுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
