தரமற்ற பாணிப் பனாட்டை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம். அத்துடன், அதனை விநியோகித்தவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றில் கடந்த மார்ச் 17ஆம் திகதி நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷ் பரிசோதனை மேற்கொண்டார். இதன்போது, பாணிப் பனாட்டின் மாதிரி பெறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட பாணிப்பனாட்டு தரமற்றது என்றும் மண் மற்றும் பிற பொருட்கள் கலந்த – மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்றும் பகுப்பாய்வு அறி;க்கை குறிப்பிட்டது.
இதையடுத்து, அதனை விற்பனை செய்தவர், உற்பத்தியாளருக்கு எதிராக இன்று ஜூன் 5ஆம் திகதி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையில் இருவரும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, உற்பத்தியாளருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், அதனை விற்பனை செய்தவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
