உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லம் மற்றம் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாட்டை எட்டிய பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் இயங்கும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அத்துடன், பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர் சகலரிடமும் கேட்டுக் கொண்டார்.
அண்மையில், களுத்துறையில் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்தே சட்ட நடவடிக்கைகள் இறுக்கமாக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
